கடந்த 20 ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் சாலை ஓரத்தில் பசியும் பட்டினியுமாக, 13 குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் என்ற தலைப்பில் செய்தி, படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிய நிலையில், செய்தியை பார்த்த சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் யாமினி அழகுமலர் என்பவர் நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சார் குடுகுடுப்பைக்காரர்கள் செய்தியை பார்த்தேன், மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்களிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்கா என்று கேளுங்கள் அப்படி இல்லை என்றால் உங்களது பேங்க் அக்கவுண்ட் நம்பரை அனுப்பி வையுங்கள் என்றார்.
பின்னர் அவருக்கு அக்கவுண்ட் நம்பரை அனுப்பிய அடுத்த நிமிடமே ரூ13000 வங்கி கணக்கில் போட்டுள்ளோம். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஆயிரத்தில் தேவையான அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை வாங்கி கொடுங்கள் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து நாம் சிதம்பரத்திலுள்ள பத்திரிகை நண்பர்கள் ரமேஷ் மற்றும் ராஜி உதவியால் அவர்களுக்கு தேவையான பொருட்களை பல கடைகளில் ஒவ்வொன்றாக வாங்கினோம். வாங்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதியான பிச்சாவரம், கீழ் அனுவம்பட்டு என்ற ஊரின் சாலையின் மரத்தடி நிழலுக்கு சென்று 13 குடும்பத்திற்கும் தனித்தனியாக 10 கிலோ அரிசி, மளிகை பொருள், காய்கறிகள் என வழங்கினோம்.
இதனை பெற்ற குடுகுடுப்பைக்காரர்கள், கொடுத்தவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் அவர்களிடத்தில் கூறுங்கள், நாங்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினோம் என்று என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் யாமினி அழகுமலர் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பொதுமக்களை படாதபாடுபடுத்தியது அப்போது நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து விவசாய தோழமை இயக்கம் (farmer friendly initiative) என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அவர்களிடத்தில் இந்த செய்தி குறித்து பேசினேன் அவர்கள்தான் உடனே பணத்தை அனுப்பினார்கள் என்றார்.
பின்னர் இயக்கத்தின் தலைவர் சிவராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசுகையில், கடந்த 2015 இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சென்னையை சேர்ந்த நாகர்ஜுனா, இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகம் பயின்றவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் வாட்சப் மூலம் அறிமுகமே இல்லாதவர்கள் ஒத்த கருத்துடன், எட்டு பேர் கொண்ட குழுவாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் அவர் தற்போது கனடாவிலிருந்து இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
தற்போது இந்த இயக்கத்தின் தலைவராக நான், செயலாளராக எட்வின், பொருளராக ராஜேந்திரன் உள்ளோம். இதேபோல் தற்போது இந்த குழுவில் தமிழகம் முழுவதும் 170 பேர் உள்ளனர். இதில் யாரும், யாரையும் பார்த்து கொண்டது கிடையாது. வாட்சப் மூலம் இரவு 9 மணிக்கு மேல் தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இதுபோல் வளர்ந்ததுதான் இந்த இயக்கம். இன்னும் பதிவுகூட செய்யவில்லை.
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை அவ்வப்போது சரிசெய்வது, அவர்களுக்கு உரம் கிடைக்காமல் இருந்தால் பெற்றுத்தருவது, மின்வசதி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி வாங்கி தருவது, மேலும் இயற்கை விவசாயம் செய்தால் என்ன நன்மை என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவிகள் செய்வது ஆகியவற்றை செய்து வருகிறோம். வாய்கால்கள் துர்ந்து இருந்தால் தூர்வாரி தண்ணீர் வர வைப்பது. குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்கிவைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம்.
மேலும் கஜா புயலில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ரூ 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை பெற்று புயலால் பாதித்த ஏழைமக்களுக்கு உதவி செய்தோம். புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் இருந்த பணப்பயிர்களான தென்னை, பலா, வாழை, புளியமரம் உள்ளிட்டவை சேதமடைந்தது, அதனால் ஒவ்வொரு வீட்டுக்கும் பலா, தென்னை, உள்ளிட்ட மரக்கன்றுகளை ஒரு கோடி இலக்கு என நிர்ணயித்து வழங்கி வருகிறோம்.
தற்போது கரோனா தொற்று காரணமாக எந்த உதவியும் இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் தினக்கூலி, ஏழைகள், அரசு உதவிகள் கிடைக்காத வெளிமாநிலத்தவர், மனவளம் குன்றியவர்கள் என அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ1,000 வழங்கி வருகிறோம். நாங்க செய்யும் செயலின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகிறார்கள். இந்த ஊரடங்கில் ரூ4 லட்சம் வரை கொடுத்துள்ளனர். அதில் ரூ 3 லட்சம்வரை ஏழை குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.
குறிப்பாக சிதம்பரம் அருகேயுள்ள சி. கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் மல்லிகா, வைரம், ரஜேஸ்வரி, சாந்தி, ஜமுனா உள்ளிட்ட ஆறு பேர் ஆதரவற்றவர்கள் என சேவையாளர்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களின் வசிப்பிடத்தை ஆய்வு செய்து அவர்களின் குடும்பத்திற்கு தலா ஆயிரம் உதவி செய்துள்ளோம். அதேபோல் இந்த 13 குடுகுடுப்பைகாரர்களுக்கும் உதவி செய்துள்ளோம். இதேபோல் தமிழக அளவில் ஏழை குடும்பங்களை அடையாளம் கண்டு வழங்கி வருகிறோம். இன்னும் கொடுக்க உள்ளோம்.
மேலும் வங்கி கணக்கில் காசு கொடுத்தால் அவர்களால் ஒன்னும் செய்யமுடியாத நபர்களுக்கு நேரடியாக உணவுப் பொருள் வாங்கி கொடுக்க ஏற்பாடுகளை செய்கிறோம். பாதிக்கப்படுபவர்களை நமக்கு அடையாளம் காட்டுங்கள், அவர்களுக்கு உதவி செய்ய தயராக இருக்கிறோம் என்று கூறினார்.