சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவினாலும், அதிமுக - திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஹாட்ரிக் அடிக்குமா? அல்லது 39 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி பலத்துடன் களமிறங்கும் திமுக வென்று சூரிய ஒளியைப் பாய்ச்சுமா? என்ற எதிர்பார்ப்பு, தொகுதி மக்களிடையே ஏகத்துக்கும் பரவிக்கிடக்கிறது.
தொகுதி எப்படி?
பழமையான வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட சேலம் மாவட்டம், ஒரு காலத்தில் சோழர்கள் ராஜ்யத்தின் கீழ் இருந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்தே பிரிக்கப்பட்டன. தற்போது 5205 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ஜனவரி 31, 2019 நிலவரப்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 881 வாக்காளர்கள் உள்ளனர்.
இவற்றில் சேலம் மக்களவை தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. தொகுதி வாரியாக சேலம் மேற்கில் 282137 வாக்காளர்கள், சேலம் தெற்கில் 251855 வாக்காளர்கள், சேலம் வடக்கில் 262656 வாக்காளர்கள், ஓமலூர் தொகுதியில் 278624 வாக்காளர்கள், எடப்பாடியில் 271332 வாக்காளர்கள், வீரபாண்டி தொகுதியில் 245883 வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர்.
சேலம் தெற்கு தொகுதியில் செட்டியார், முதலியார், சவுராஷ்டிரர், வன்னியர், பட்டியல் சமூகத்தினர் என பல்வேறு சமூகத்தினர் கலந்து வசிக்கின்றனர். மற்ற ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 55 சதவீதம் வன்னியர் சமூகத்தினர் வசிக்கின்றனர். இத்தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாகவும் வன்னியர் சமூகத்தினர் விளங்குகின்றனர்.
அதனாலேயே, திமுக, அதிமுக கட்சிகள் சேலம் மக்களவை தொகுதியில் பெரும்பாலும் வன்னியர் சமூகத்தினரையே வேட்பாளராக்கி வருகின்றன. தறி நெசவாளர்கள், வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள் என இத்தொகுதியில் அன்றாடங்காய்ச்சிகளும் அதிகம்; நடுத்தர வகுப்பினரும் அதிகம். அதனால், எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. நடப்பு மக்களவை தேர்தலின்போதும் வாக்காளர்களுக்கு முக்கிய கட்சிகள் பணத்தை வாறியிறைக்கும் எனத்தெரிகிறது.
எந்தக் கட்சிக்கு செல்வாக்கு?
இதுவரை நடந்த 16 மக்களவை தேர்தல்களில் 1952, 1957, 1962, 1984, 1989, 1991, 2004 ஆகிய காலக்கட்டங்களில், சேலம் மக்களவை தொகுதியை காங்கிரஸ் கட்சி 7 முறை கைப்பற்றி இருக்கிறது. இத்தேர்தல்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி, திமுக அல்லது அதிமுக குதிரையில் சவாரி செய்தே, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இன்றைய நிலையில் சேலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்பது தொகுதிக்கு 5000 முதல் 7000 ஓட்டுகள் என்ற அளவில் சுருங்கிவிட்டது.
அதேபோல், 1967, 1971, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலின்போது திமுகவும் இத்தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறது. 1977, 1999, 2009, 2014 என நான்கு முறை அதிமுகவும் இத்தொகுதியை வசப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 1996 தேர்தலிலும், 1998 தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியும் தலா ஒருமுறை வெற்றி பெற்றிருக்கின்றன. எனினும், இந்த தொகுதி திமுகவைக் காட்டிலும் அதிமுகவுக்கே மிகவும் நம்பகமான தொகுதியாக கருதப்படுகிறது.
என்ன செய்தார் எம்பி?
சேலம் மக்களவை தொகுதியின் சிட்டிங் எம்பியான பன்னீர்செல்வம் (அதிமுக), சேலம் அணைமேடு, முள்ளுவாடி கேட் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைய மக்களவையில் குரல் கொடுத்துள்ளார். அவருடைய முயற்சியால் இப்போது மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அதனால் மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். போடிநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலமும் அவரது முயற்சியால் கிடைத்துள்ளது.
மற்றபடி குறிப்பிடத்தக்க வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. அவர் வசித்து வரும் பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோயில், வாய்க்கால் பட்டறை பகுதிகளில் இன்றைக்கும் திறந்தவெளி கழிப்பிடம் முறை நீடிப்பதுதான் அவலம். கடந்த தேர்தலின்போது, 'அனைத்துமே அம்மாதான்' என்ற நிலை இருந்ததால், அதிமுக எம்பி தரப்பில் தனியாக ஏதும் வாக்குறுதிகள் தரப்படவில்லை.
எளிமையானவர்தான் என்றாலும், சேலம் தொகுதி மக்களின் நினைவில் தங்காதவர். பெரும்பாலான மக்களுக்கு தங்கள் தொகுதியின் எம்பியின் பெயர்கூட தெரியாது என்ற நிலைதான் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வருகையின்போது மட்டுமே அவர் எட்டிப்பார்ப்பார். 'அதிமுக எம்பியாக அந்தளவே செயலாற்ற முடியும் என்பதால் இதெல்லாம் பழகிப்போச்சுங்க சார்...' என்கிறார்கள் தொகுதி மக்கள்.
ஹாட்ரிக் அடிக்குமா அதிமுக?
அதிமுக எம்பி எதுவுமே செய்யாவிட்டாலும், இந்த தொகுதி அக்கட்சிக்கு நம்பிக்கைக்கு உகந்ததாகவே இருந்து வருவதுதான் ஆச்சர்யம். கடந்த 2014, 2009 என தொடர்ச்சியாக இந்த தொகுதியை கைப்பற்றி இருக்கும் அதிமுக, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது. சேலம் தொகுதியை வென்று காட்டினால்தான் இந்த மண்ணின் மைந்தன் என்பதையே கவுரமாக சொல்லிக்கொள்ள முடியும் என்று எடப்பாடி பழனிசாமி, கட்சியினரிடம் கறாராக கூறியதாகவும் சொல்கின்றனர். அதனால் தேர்தல் நெருக்கத்தில், வெற்றிக்கான அனைத்து உபாயங்களையும் களத்தில் செயல்படுத்த தயாராகி விட்டதாகவே இலை கட்சியினர் கூறி வருகின்றனர்.
கடந்த 2014 தேர்தலின் அதிமுகவின் வி.பன்னீர்செல்வம் 556546 வாக்குகள் பெற்று, எம்பி ஆனார். அவருக்கு அடுத்த இடத்தில் திமுக வேட்பாளர் செ.உமாராணி 288936 வாக்குகளே பெற்றார். அப்போது திமுக தனித்துப் போட்டியிட்டது. பாஜக அணியில் களமிறங்கிய தேமுதிக வேட்பாளர் சுதிஷ் 201265 வாக்குகளை அள்ளினார். இத்தனைக்கும் பன்னீர்செல்வம் எம்பி, 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார். அப்போது தனித்துப் போட்டியிட்ட அதிமுகவின் வெற்றி வித்தியாசம் 267610 வாக்குகள். இதிலிருந்தே, சேலம் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கை அறியலாம்.
இப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாமகவும் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. அசுர பலம் இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் போன்ற இத்யாதி தந்திரங்களை செயல்படுத்தவும் ஆளும்தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தொகுதியில் அதிமுக தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். அவர், ஏற்கனவே கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 9873 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். எடப்பாடியின் தீவிர விசுவாசியான இவரை, எப்படியும் ஜெயிக்க வைப்பது, இரட்டை இலையை தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக துளிர்க்க வைக்க வேண்டும் என்ற முஸ்தீபுகளில் இருக்கின்றனர் அதிமுகவினர்.
திமுக நிலவரம் எப்படி?
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின்போது அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது எழுந்த அங்கம்மாள் காலனி விவகாரம், அக்கட்சியினர் மீது பரவலாக எழுந்த நில அபகரிப்பு புகார்கள், கட்டப்பஞ்சாயத்துகளால் அக்கட்சி மீது சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதனால்தான் 2011ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. பொதுமக்கள் மத்தியில், திமுகவினர் மீது இன்னும் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டதாக தெரியவில்லை என பரவலாக சொல்கின்றனர். 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் திமுக வெற்றி பெற்ற ராஜேந்திரன் எம்எல்ஏவின் தனிப்பட்ட இமேஜூம், அதிமுகவின் உள்ளடிகளும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், சேலம் மக்களவை தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார் வழக்கறிஞர் எஸ்.ஆர்.பார்த்திபன். வன்னியர் சமூக்தைச் சேர்ந்தவர். நல்ல பேச்சாளர். தீவிரமாக களப்பணியாற்றக்கூடியவர். மேட்டூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது, மக்கள் நலப்பிரச்னைகளுக்காக 5 ஆண்டுகளில் 54 போராட்டங்களை நடத்தி, அவற்றில் 50 போராட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டார். இதுவரை யாருமே பயணிக்காத பாலமலை மலைகிராமத்திற்கு பயணித்தது. ஒரே நாளில் 300 பேருக்கு இலவசமாக பட்டா வாங்கிக்கொடுத்தது என தீவிர களப்பணி மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.
ஆனால், 2016ல் நடந்த தேர்தலில் மீண்டும் மேட்டூரில் போட்டியிட்ட அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. ஆனாலும் கடைசி சுற்றுவரை அதிமுகவின் செம்மலையிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறித்து விடுவாரோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியதே, அவருடைய முந்தைய களப்பணிக்கு கிடைத்த சான்றாகச் சொல்ல முடியும்.
அதனால் வேட்பாளரைப் பொருத்தவரை திமுக மிக வலிமையானவரைத்தான் களமிறக்கி இருக்கிறது எனலாம். என்றாலும், திமுகவில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் ஓரணியாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏவுக்கு எதிராக களமாடுவதால், அவருடைய ஆதரவாளரான பார்த்திபனுக்காக எந்த அளவுக்கு இறங்கிவந்து தேர்தல் வேலை செய்வார்கள் என்ற சந்தேகமும் கட்சிக்குள் எழுந்துள்ளது.
கூட்டணியாக கடந்த 1980க்குப் பிறகு 39 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திமுக நேரடியாக சேலம் தொகுதியில் போட்டியிடுகிறது. முதல்வர் மாவட்டம் என்பதால் அதிமுகவை வீழ்த்த திமுகவும் எல்லாவித உத்திகளையும் கையாளத் திட்டமிட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50000 முதல் 60000 வரையுள்ள நிலையான வாக்குவங்கியும், இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், கொமதேக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் பலத்துடனும் இந்தமுறை இரட்டை இலையை உதயசூரியன் சுட்டுப்பொசுக்கி விடும் என்ற நம்பிக்கையில் களமாடி வருகின்றனர் உடன்பிறப்புகள்.
வில்லன் அமமுக!
கடந்த ஓராண்டுக்கும் மேலாக எடப்பாடிக்கு எதிராக தீவிரமாக சுழன்றடித்து வருகிறார் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். எடப்பாடியையும், அவருடைய ஆட்சியையும் வீழ்த்துவதற்கு இதுதான் சரியான தருணம் எனக்கருதுகிறது அமமுக. அதனால், அமமுக வெற்றி பெறுகிறதோ இல்லையோ எப்படியும் அதிமுகவை சேலம் தொகுதியில் தோற்கடித்து, வஞ்சம் தீர்த்துக் கொள்ள துடிக்கிறது அமமுக. அதனால், ஏற்கனவே வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக இருந்த எஸ்.கே.செல்வத்தை இத்தொகுதியின் வேட்பாளராக்கி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
''சேலம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மக்களவை தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம். இந்த இடைத்தேர்தலின் முடிவில் எடப்பாடி தலைமையிலான அதிமுக வீட்டுக்குப்போய் விடும். அதற்கேற்ப களப்பணிகளை செய்து வருகிறோம் என்கிறார்கள்,'' அமமுக நிர்வாகிகள். சேலம் மக்களவை தொகுதியில் அமமுக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தினகரனால் கணிசமாக வாக்குகள் சிதறிப்போகும் என்றால், அது திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
என்னதான் பலமான கூட்டணியை கட்டமைத்து இருப்பதாக அதிமுக தரப்பில் சொல்லிக்கொண்டாலும், கூட்டணி பலத்துடன் களமிறங்கியிருக்கும் திமுக, ஆர்.கே.நகர் நாயகனின் அமமுக, புதிய வக்காளர்களின் எழுச்சி, ஆட்சி மீதான எதிர்ப்பு அலைகள் ஆகியவற்றால் ஆளும்தரப்பின் கூடாரமும் சற்று ஆடிப்போயிருப்பதுதான் நிகழ்கால யதார்த்தம்.
மாம்பழ மாவட்டத்தின் தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பது மே 23ல் தெரிய வரும்.