திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் தோட்டத்தில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து அவனை மீட்க 15 க்கும் மேற்பட்ட தன்னார்வ மீட்புக் குழுக்கள், மத்திய மாநில அரசுகளின் பேரிடர் மீட்புக்குழுக்கள், ஒ.என்.ஜி.சி., என்.எல்.சி, ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் என 20 க்கும் மேற்பட்ட குழுக்கள் என்று சுமார் 600 பேர்கள் வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பல இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 80 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சடலமாகத்தான் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இது போன்ற ஆழ்குழாய் கிணறுகளில் தவறி விழுந்து சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்க உபகரணங்களை கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இப்படி உருவாக்கி வைத்திருக்கும் உபகரணங்கள் மீட்பு பணிக்கு கை கொடுக்குமா என்ற கேள்வியுடன் சிறுவன் சுர்ஜித் வில்சன் மீட்புக்குழுவில் இடம் பெற்று இரண்டாவது முறையாகவும் மீட்புப் பணிக்காக அழைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணியை சந்தித்தோம்.
குழந்தை சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து மீட்க பல குழுக்களும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. 27 அடியில் சிறுவன் சிக்கி இருந்த போது தொலைக்காட்சி மூலம் பார்த்துவிட்டு இரவு 8 மணிக்கு பிறகு உடனடியாக ஒரு உபகரணத்தை வடிவமைத்துக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அனுமதி பெற்று அதிகாலை நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றோம்.
எங்கள் குழுவினர் சென்ற போது சுர்ஜித் 70 அடிக்கு இறங்கிவிட்டது தெரிய வந்தது. எங்கள் கேமராவை அனுப்பி பார்த்த போது சிறுவன் மீது மண் சரிந்திருந்தது. அந்த மண்ணை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அதற்குள் மற்றொரு குழு வந்துவிட்டதால் எங்களுக்காண வாய்ப்பு முடிந்தது. அதன் பிறகு மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் வந்துவிட்டதால் தன்னார்வ குழுக்களுக்காண வாய்ப்புகள் இல்லை.
அந்த குழுக்கள் குழந்தையை மீட்டு விடுவார்கள் என்று நாங்கள் ஊருக்கு திரும்பிவிட்டோம். ஆனால் தொடர் போராட்டம் நடந்தது. ரிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் 28 ந் தேதி மதியம் மீண்டும் எங்களை அழைத்தார்கள். அதனால் சதாசிவம், அருள், விஜய்ஆனந்த், ராஜேந்திரன், அலெக்ஸ், தங்காரஜ் உள்பட 7 பேர்கள் கொண்ட குழுவினர் புறப்பட்டோம். அப்போது குழந்தை எப்படி இருந்தாலும் மீட்கும் முயற்சியில் மண்ணை அகற்ற, கயிறு முறை, ஒரு அங்குல ஓட்டையில் இரும்பு பட்டைகளை அனுப்பி அமர வைத்து மீட்பது என்று பல உபகரணங்களையும், வேறு முறை பயன்படுத்தப்பட வேண்டி இருந்தால் அதையும் உடனே செய்ய உபகரணங்கள், வெல்டிங் மெஷின் உள்பட அனைத்தையும் தயாராக கொண்டு சென்றோம். எங்கள் உபகரணங்களையும், செயல் விளக்கத்தையும் கேட்ட என்.எல்.சி மீட்புகுழுவினர் சரியான முறைகள் தான் என காத்திருக்க சொன்னார்கள். ஆனால் அதற்குள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தமிழக அரசு புதிய உபகரணம் கண்டுபிடித்தால் ரூ. 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வரவேற்க தக்கது தான் என்றாலும் அந்த கண்டுபிடிப்புகள் எல்லா இடங்களுக்கும் பயன்படுத்த முடியாது. அதாவது 27 அடியில் இருந்த சுர்ஜித்தை மீட்க நாங்கள் உருவாக்கிய உபகரணம் 70 அடிக்கு போனதுடன் மண் மூடியதால் பயன்படவில்லை. அதனால் தான் அடுத்த முறை செல்லும் போது குழந்தை இருக்கும் நிலையை பார்த்து உடனடியாக உபகரணம் செய்ய தேவையான பொருட்களையும் கொண்டு போனோம். அதே போல தான் ஒவ்வொரு உபகரணமும் ஒவ்வொரு இடத்தில் பயன்படும், அடுத்த இடத்தில் அது பயன் தராது.
முதலில் ஆழ்குழாயில் ஒரு குழந்தை எப்படி சிக்கி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு உடனடியாக அதற்கு ஏற்ப உபகரணங்களை உருவாக்கி மீட்பு பணியில் இறங்க வேண்டும். மீட்பு பணியில் இருப்பவருக்கு முக்கியமாக நிதானம் வேண்டும். இது மட்டும் தான் சாத்தியமாகும். சுர்ஜித் மீட்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட எந்த உபகரணமும் கை கொடுக்கவில்லை என்பதை பார்த்தாலே தெரியும். அதனால் அரசு உருவாக்கும் ஆழ்குழாய் கிணறு குழந்தைகள் மீட்புக்குழுவில் இது போன்ற சூழ்நிலைகளைப் பார்த்து உடனுக்குடன் உபகரணங்களை உருவாக்கும் நபர்களையும், ஆழ்குழாய் கிணற்றுக்குள் லாவகமாக உபகரணங்களை செயல்படுத்தும் நபர்களையும் இணைத்து குழுவை உருவாக்கி வைத்திருந்தாலே போதுமானது.
மேலும் உபகரணங்களை உருவாக்க தேவையான மூலப் பொருட்கள், வெல்டிங் மெஷின், கம்பிரசர், உறிஞ்சும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைத்திருப்பதுடன் விபத்து நடந்த இடத்திற்கு அவற்றை உடனடியாக கொண்டு செல்ல வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மீட்பு பணியை திறம்பட செய்ய முடியும் என்றார்.