சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும் அந்தியோதயா முன் பதிவில்லா ரயில் ஜீன் 8-ந்தேதி இயக்கப்பட்டது. இது விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை கும்பகோணம், திருச்சி வழியாக இரு வழிமார்க்கமாக சென்று வருகிறது. இந்த ரயில் கடலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட நிற்கவில்லை. இதனையொட்டி ஜூன் 8-ந்தேதி காலை நக்கீரன் இணையத்தில் கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கும் அந்தியோதயா ரயில் என்ற தலைப்பில் விரிவான செய்தி கட்டுரை படங்களுடன் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இச்செய்தினை பல பேர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள். அதன் பிறகு மாவட்டத்திலுள்ள செய்தி தொலைக்காட்சிகளும் இதனை கையில் எடுத்து பிரச்சணையை விளக்கினார்கள்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் அந்தியோதயா ரயிலை கடலூர், சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடலூர் தொகுதி எம்.பி. அருண்மொழிதேவன், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் தருமபுரி தொகுதி எம்.பி. அண்புமணி ராமதாஸ் ஆகியோர் ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயலை சந்தித்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே உதவி வணிக மேலாளர் ராஜாசுந்தரம் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ரயில் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரயில்வே கோட்ட உதவி மேலாளர் ராஜாசுந்தரம் பேசுகையில் சுற்றுலா மற்றும் ஆண்மீக தளமான சிதம்பரம் ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில், வாரந்திர ரயில் புவனேஸ்வர் - ராமேஸ்வரம், பைசாபாத் - ராமேஸ்வரம் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலயத்தில் ஸ்டேசன் மாஸ்டர் ஒருவர் கூறுகையில் அந்தியோதயா, புவனேஸ்வர் ரயில் இன்னும் இரண்டு நாட்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நின்று செல்லும். பைசாபாத் ரயில் குறித்து சரியான தகவல் இல்லை. ரயிலை நிறுத்த வேண்டும் என்ற தொடர் செய்தியாலும், சமூக அமைப்புகளின் போராட்டம் தான் திருச்சியில் உள்ள ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போர்டு உறுப்பினர்களை திரும்பி பார்க்கவைத்துள்ளது என்றார்.