கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்குடி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு என்ற கிராமத்தில் பட்டியல் இன சமூகபிரிவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சார்பில் சாலைவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த பொதுசாலையை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் எனக்கூறி பாதையில் செல்வதற்கு வழியில்லை என மூங்கில் வேலியைகொண்டு தெருவின் பொதுபாதையை கடந்த 13-ந்தேதி அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேலியை எடுத்துபோட்டு செல்ல பயந்துகொண்டு அருகில் இருக்கும் பள்ளமான வயலில் இறங்கி சென்று வருகிறார்கள்.
பின்னர் இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றைய தினமே மனுகொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரசீது மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தபகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இதனைதொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,தேன்மொழி, மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு மாசிலாமணி உள்ளிட்டவர்கள் சம்பவஇடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் ஊர்கூட்டம் நடத்தி அதன் விபரத்தினை அறிந்தனர். பின்னர் ஊர்மக்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நிலமையை சார்ஆட்சியரிடம் எடுத்து கூறினார்கள். மேலும் இருநாட்களுக்குள் தீண்டாமை வேலியை எடுக்கவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவரிடம் கூறினார். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
இந்நிலையில் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்ட வருவாய்துறையினர், காவல்துறையினர் சென்று பொதுபாதையை அடைத்துவைத்துள்ள வேலியை அப்புறபடுத்தினார்கள்.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வாஞ்சிநாதன் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வசித்து வருகிறார்கள். இவர்களின் குடியிருப்பை சுற்றி மாற்றுசமூகத்தினரின் வயல்கள் உள்ளது. இவர்களது வயல்களில் கூலிவேலைக்கு செல்லவில்லையென்றால். பட்டியல் இனமக்களின் பொதுபாதையை அடைத்துவைத்து அவர்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். இது தீண்டாமையின் கோரவடிவம் மிகவும் கண்டிக்கதக்கது. தற்போது அடைத்து வைத்த பாதையை அகற்றினாலும் அவர்கள் மறுபடியும் அடைக்கசெய்வார்கள். எனவே சார்ஆட்சியர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும் பொதுபாதையை அடைத்தவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மேற்கண்ட தகவல் குறித்து நக்கீரன் இணையத்தில் கடந்த14-ந்தேதி செய்தி வெளியானது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதனடிப்படையில் அரசியல் கட்சியனர் மற்றும் பொதுநல அமைப்புகள் தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்ததால் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளது.