பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து பல மாநிலங்கள், மாவட்டங்களைக் கடந்து கூலி வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள், கல்லூரி மாணவர்கள் எனப் பல ஆயிரம் பேர் கரோனா ஊரடங்கால் ஆங்காங்கே மாட்டிக் கொண்டனர். இதில் பலர் பல நூறு கி.மீ. வரை நடந்தே ஊர்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பலர் வர முடியாமல் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மறமடக்கி, சிட்டங்காடு, தொழுவங்காடு, திருநாளூர், பரவாக்கோட்டை, குளமங்கலம், பனங்குளம் மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள திருச்சிற்றம்பலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 கூலித் தொழிலாளிகள் நாகர்கோவில் அருகில் உள்ள மாராமலை பகுதி சின்ன பாலமோரு எஸ்டேட்டில் ஏலக்காய் பறிக்கும் பணிக்குச் சென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் மலையடிவாரத்தில் தவித்து வருகின்றனர்.
மலையடிவாரத்தில் தவிக்கும் அந்தத் தொழிலாளர்கள் முதலமைச்சர் மற்றும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு எங்களைக் காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கண்ணீரோடு கோரிக்கை வீடியோ அனுப்பி உள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த மெய்யநாதன் எம்.எல்.ஏ. சம்மந்தப்பட்ட வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரிக்கு அனுப்பி எங்க தொகுதியில் இருந்து நாகர்கோயிலில் தவிக்கும் கூலித் தொழிலாளர்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவும் அனுப்பி தொலைபேசியில் கோரிக்கையை விளக்கியுள்ளார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக எம்.எல்.ஏ கூறினார். தொழிலாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.