நாகா்கோவில் நெசவாளா் காலனியை சோ்ந்தவா் ரஞ்சித்குமார் (32) சொந்தமாக மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராசி (28) இவா்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு அக்ஷயா (5), அனியா(3) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரஞ்சித்குமார், மனைவியிடம் எப்போதும் அன்பாக தான் இருப்பாராம். காலை மதியம் இரவு என மூன்று வேளையும் ஒன்றாக தான் சாப்பிடுவார்களாம். அதேபோல் கோவில் மற்றும் திருமணம் நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகத்தான் செல்வார்களாம். கணவனை தவிர்த்து மனைவி இதுவரையிலும் கடைக்குக்கூட தனித்து போனதில்லையாம்.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் ரஞ்சித்குமார் இறந்தார். அதிலிருந்து மனைவி ராசி யாரிடமும் ஒழுங்கா பேசுவதில்லையாம். தன்னுடைய அம்மா வீட்டிற்கும் செல்லாமல் மாமனார் மாமியாருடனே வசித்து வந்தார். எந்த நேரமும் கணவனின் போட்டோவை செல்போனில் பார்த்து அழுது கொண்டே இருப்பாராம். இதை பார்த்த அக்கம் பக்கத்தினா் உறவினா்கள் எவ்வளவோ அமைதிபடுத்தியும் எடுத்து சொல்லியும் அவா் கேட்காமல் பித்து பிடித்தவா் போல் இருந்து வந்தார்.
மேலும் வருமானமின்றியும் குடும்பம் தள்ளாடியது. இதனால் குழந்தைகளுக்கும் அவா்கள் விரும்பி கேட்கும் உணவுகளை வாங்கி கொடுக்க முடியாமல் தவிர்த்தனா். இதனால் வயதான மாமனார் அங்குள்ள கடை ஒன்றில் வேலைக்கு போனார். இருந்தும் வருமானம் போதாத குறையாக இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டனா்.
இந்த நிலையில்தான் ஒரு வருடத்துக்கு முன் மெடிக்கல் கடைக்கு கணவா் வீட்டில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எடுத்து இன்று (2-ம் தேதி) காலையில் டீ-யில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்தார் ராசி. அதேபோல் அவரும் தூக்க மாத்திரைகளை டீ-யில் கலக்கி குடித்தார். இதில் கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளி மயக்க நிலையிலே உயிரிழந்தனா். அதன்பிறகு ராசி வீட்டில் இருந்த வார்னீஷ் டின்னரை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
அந்த நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இன்னொரு அறையில் இருந்த மாமனார், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து ராசியை காப்பாற்ற முயற்சித்தும் அது முடியாமல் போனது. இந்த சூழலில் அந்த காலனியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கிடையில் ராசி எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘வாழ பிடிக்காததால் குழந்தைகளோடு நானும் கணவா் சென்ற இடத்துக்கே செல்கிறேன்’ என எழுதியுள்ளார்.