Skip to main content

சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு, சைக்கிள் வழங்கிய காவல்துறை

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
nagapattinam - School Student corona help



சைக்கிள் வாங்க சிறுக, சிறுக சேர்த்த உண்டியல் பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய நாகப்பட்டினம்  மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்து அவரது ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்கள் மாவட்ட காவல்துறையின் காவலர் நண்பர்கள் குழுவினர்.


நாகை மாவட்டம் காமேஷ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. கூலி வேலை பார்க்கும் பூமாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கான்கிரீட் இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒற்றை கையை இழந்து தவித்தார்.

ஆனாலும் அவரது மன தைரியத்தால் நாகை மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் (Friends Of Police) இணைந்து கரோனா தடுப்பு பணியில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது 10 வயது மகளான கனகா, கரோனா பாதிப்புகள் குறித்தும், முதல்வருக்கு பலதரப்பினரும் நிவாரணம் கொடுத்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைகாட்சி மூலம் பார்த்து தனது தந்தையிடம் நம்மளும் ஏதாவது உதவ வேண்டும் என கூறியிருக்கிறார்.

 

 


மகளின் அன்பு கட்டளையை ஏற்று ஏதாவது செய்யனும் என குடும்பத்தினரோடு யோசித்துக்கொண்டிருக்கையில், கரோனா பாதிப்பால் ஏழை மக்களின் துயரத்தை போக்க, தான் ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துவிடலாம் என தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

 

 

nagapattinam - School Student corona help - Bicycle -


 

இதனை கேட்டு ஆச்சர்யம் அடைந்த கனகாவின் தந்தை பூமாலை மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து இரண்டு வருடத்திற்கு முன்பு விபத்துக்குள்ளாகி தனது ஒற்றை கையை இழந்த அதே தினத்தில் மாவட்ட ஆட்சியரை குடும்பத்தோடு சந்தித்தார். ஆட்சியர் அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று சிறுகச், சிறுக சேமித்த சிறுமியின் 2210 ரூபாய் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக பெற்றுக்கொண்டு சிறுமியை வெகுவாக பாராட்டினார்.


இந்தநிலையில் சிறுமி கனகாவின் சைக்கிள் வாங்கும் ஆசையை நிறைவேற்ற காவல்துறை இயக்குனர் டாக்டர் பீரதீப் வி.பிலிப் தமிழ்நாடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, காவலர் நண்பர்கள் குழு சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் சிறுமி கனகா மற்றும் அவரது சகோதரர் கோகுல் ஆகியோரை, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சிறுமியின் குடும்பத்தினரோடு நேரில் வரவழைத்து சைக்கிள் வழங்கினார்.

ஒருவருக்கு ஒருவர் உதவும் எண்ணம் கடைசி உயிர் இருக்கும் வரை தொடரும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்