நாகையில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு வரும் ஏழாம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். அதனால் நாகப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள சில பகுதிகள் குதுகலமாகியிருக்கிறது, அதே நேரத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மயிலாடுதுறை கோட்டத்தின் மக்களோ மருத்துவக் கல்லூரி விவகாரத்திலும் தங்களை புறக்கணித்து விட்டதாக வேதனையின் உச்சத்திற்கு சென்றவர், முதலமைச்சர் வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் அமைய உள்ளது. 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரிக்கு 7 ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டிவைக்கிறார்.
முதலமைச்சரின் வருகைக்காக பிரமாண்ட ஷெட் அமைப்பது, புதிய சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள் பொருத்துவது என தீவிர வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் உள்ளிட்ட அதிமுகவினர் .
இந்த நிலையில் நாகை மாவட்டத்தின் மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில், உள்ளிட்ட பகுதி மக்களோ தங்களை ஆளும் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், முதல்வர் பழனிச்சாமி வரும்போது வீடுகளில்,தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து மயிலாடுதுறை போராட்டக்குழு தலைவர்களுல் ஒருவரான வழக்கறிஞர் சேயோன் கூறுகையில்," மயிலாடுதுறைக்கு மாவட்டம், மருத்துவக் கல்லூரி, புறவழிச்சாலை, தொழிற்சாலைகள் என பல கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த போதிலும் ,
தமிழக அரசு தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நாளான மார்ச் 7 ம் தேதியன்று, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் பொதுமக்கள் கருப்புக் கொடியை ஏற்றி தங்களுடைய எதிர்ப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.