Skip to main content

மத்திய அரசைக் கண்டித்து கொட்டும் மழையில் ஏழு மாவட்ட மீனவர்கள் நாகையில் ஆர்பாட்டம்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

nagapattinam fishermen struggle

 

இந்தியக் கடற்படை மயிலாடுதுறை மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கொட்டும் மழையிலும் ஏழு மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

 

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகு மீது இந்தியக் கடற்படை அதிகாரிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மீனவர்களின் விசைப் படகில் 47 குண்டுகள் துளையிடப்பட்டது.

 

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான இந்தியக் கடற்படை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

nagapattinam fishermen struggle

 

"துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான இந்தியக் கடற்படை வீரர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 98 விசைப்படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் இந்தியக் கடற்படைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்