நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைத்தீர்க் கூட்டத்திற்கு அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளையும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைத்திருந்தார். அதன்படி குறைத்தீர்க் கூட்டத்திற்குச் சென்ற திருநங்கைகளிடம், அவர்கள் சுய தொழில் துவங்க என்னென்ன தேவை என ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது திருநங்கைகள், தங்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இல்லை, இதனை உடனடியாக எங்களுக்கு வழங்கிட ஆவணம் செய்யவேண்டும். அதோடு வங்கி கடன் உதவியுடன் சுய தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து திருநங்கைகள் சுய தொழில் துவங்க அனைத்து ஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறியதோடு, வீட்டு மனை பட்டாக்களையும் வழங்க உத்தரவிட்டார்.
பின்னர் திருநங்கைகளிடம் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு வழங்கும் நலத் திட்டங்களை பெற்றுக்கொள்ளும் திருநங்கைகள் சமூகத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினார்.