Skip to main content

'நான் தயார், நீங்கள் தயாரா? தமிழகத்திலும் அதைச் செய்வோம்...' - அரசு விழா மேடையில் அமித்ஷா சவால்!! 

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

amitsha in kalaivanar arangam

 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2020) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர். முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், காணொளிக் காட்சி மூலமாக திருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 61,843 கோடியில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல், கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 309 கோடி மதிப்பில், சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

amitsha in kalaivanar arangam


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உலகில் மிகத் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதது எனக்கு வருத்தமே. தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. கரோனாவிற்கு எதிராக அரசு மட்டுமல்ல, 130 கோடி மக்களும் போராடுகிறார்கள். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம், தேசிய அளவில் தமிழகத்தில் தான் அதிகம். கரோனா தடுப்பு மட்டுமல்ல நிர்வாகத் திறனிலும் தமிழகம்தான் இந்தாண்டு முதலிடம். நாடு முழுவதும் விவசாயிகளைக் கட்டுப்படுத்திவந்த இடைத்தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குத் தொடர்ந்து மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைத்திருக்கிறது எனக் கூறுவார்கள். நான் இங்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், 10 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள், நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறீர்கள், எனப் பட்டியலிடுங்கள். எங்கள் தரப்பில் நான் மிகவும் பணிவோடு நாற்சந்தியில் நின்றுகொண்டு பட்டியல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? மிகுந்த நாட்களுக்குப் பிறகு சென்னை வந்திருக்கிறேன் எனவே அரசியல் பேசவும் விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வருகிறது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். ஊழலைப் பற்றிப் பேச திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்