நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களோடு சென்று மீனவர்களின் கஷ்டங்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பார்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஜானி டாம் வர்கீஸ். இவர் நாகை ஆட்சியராக வந்த நாளில் இருந்து ஏதாவது வித்தியாசமான சம்பவங்களைச் செய்து சமூக வலைதளத்தில் வைரலாவது வாடிக்கை. நாகை ஆட்சியராகப் பதவியேற்ற மறுநாளே தூர்வாரும் ஆய்வு பணிகளைப் பார்வையிடச் சென்றவரிடம் பள்ளி சிறுமி ஒருவர், தங்களை ஊர் விலக்கி வைத்துள்ளதைக் கூறுவதும், அதை ஆட்சியர் பொறுப்புடன் நின்று விசாரிப்பதுமான வீடியோ வைரலானது.
இந்த நிலையில் மீனவர்களின் விசைப்படகில் சென்று கடலில் விசைப்படகை இயக்கியுள்ளார். அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது சந்திக்கும் இன்னல்களை நேரடியாகக் கண்டுள்ளார். நடுக்கடலில் மீனவர்களின் பாரம்பரிய வழக்கப்படி சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு மீன்பிடி வலையை கடலில் இறக்கி மீன் பிடிக்கும் வீடியோ படகோட்டி படப் பாடல் பின்னணியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து ஆட்சியர் கூறுகையில், “சாதாரணமா மீன் பிடிப்பதை குடும்பத்தோடு பார்க்கணும்னு போனோம். தினசரி அவர்கள் படும் துயரத்தை ஒருநாள் பயணத்தில் கனத்த மனதோடு காண முடிந்தது. பாடல் வரி போல ஒவ்வொரு நாளும் துயரம் தான் அவர்களின் வாழ்க்கை” என்கிறார்.