வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு தாமாக முன்வந்து உதவிசெய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 6- ஆம் தேதி அன்று பணி முடிந்து வீடு திரும்பிய கூலித்தொழிலாளி பெண் ஒருவரை, வெளிப்பாளையம் நாகதோப்புப் பகுதியைச் சேர்ந்த இருவர் (கஞ்சாபோதையில்) அங்குள்ள கோவிலில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, 'கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கிட வேண்டும்', 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்'. 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் கொடுத்து உயர் சிகிச்சை அளித்திட வேண்டும்' என முழக்கமிட்டனர்.
இதுகுறித்து மாதர் சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபடாததே இதற்கு முதற்காரணம், இனிமேலாவது ரோந்து போகனும், அதோடு வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவர் காவல்நிலையத்துலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதனால் அவர் வெளியில் வராதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இளம் பெண்பிள்ளைகள் இருக்காங்க, அவர்களால் வெளியில் வரமுடியாத சூழல் உருவாகியிருக்கு, அவர்களுக்கு அரசு தாமாக முன்வந்து உதவி செய்ய வேண்டும், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.