பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கியவர் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், பிறகு பாஜகவிற்கு சென்று மீண்டும் அவரது தாய் கழகமான திமுகவிற்கே திரும்பியிருக்கிறார்.
நாகை மாவட்டத்தின் கடலோர பகுதியான வேதாரண்யத்தை அடுத்துள்ள தேத்தாக்குடியை சேர்ந்தவர் வேதரத்தினம். எஸ்.கே.வி என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வேதரத்தினம். திமுகவில்12 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகவும், 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்காமல், அப்போது கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டது வேதாரண்யம் தொகுதியை தாரைவார்த்தது திமுக. அதனால் திமுக மீது கோபமான வேதரத்தினம் சுயேச்சையாக போட்டியிட்டு பாமக வேட்பாளராக போட்டியிட்ட சின்னத்துரையை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து, திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அதன்பிறகு தனிமரமாக இருந்தவரை தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகும் வாய்ப்பை பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பிறகு 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடியே ஆகாய மார்க்கமாக தேத்தாக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டார். ஆனாலும் அந்த தேர்தலில் வேதரத்தினத்தால் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியை தழுவினார்.
ஆனாலும் பெயர் சொல்லும் அளவிற்கு வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கு குறையவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மார்தட்டிக்கொண்டார். அதன் பிறகு மாநில பொறுப்பில் இருந்தவருக்கு, மாநில பொது செயலாளர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்தநிலையில், சமீபத்தில் நடந்த கட்சி அறிவிப்பில் மாநில பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக்கி டம்மியாக்கினர். பொறுப்பை வழங்கி அவரை ஓரம்கட்டும் நிலை உருவானது. மீண்டும் விரக்தியான வேதரத்தினம் அதிமுகவா, திமுகவா என்கிற நிலைப்பாட்டிற்கு சென்றிருக்கிறர். அந்த சமயத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மூலம் திமுகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்புதல் வாங்கி இன்று மாலை வேதாரண்யம் நகர அலுவலகத்தில், வீடியோ கால் மூலம் மீண்டும் திமுகவில் சேர்ந்திருக்கிறார்.
அதன்பின் திமுக நகர கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று வேதாரண்யம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.