கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஒருவர், திருந்தி மனைவியோடு கூலி வேலைக்குச் சென்றாலும் காவல்துறை தொந்தரவு செய்வதாக தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து, தண்டனை காலம் முடிந்து தற்போது பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், திருந்தி வாழும் தன்மீது நாகை நகர போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறி, சிங்காரவேலு நாகை எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். எஸ்.பி. அலுவலகம் நுழைவு வாயிலுக்குள் தனது மனைவியுடன் வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தூக்கிவீசிவிட்டு, சிங்காரவேலன் தலையில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.
தொடர்ந்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கார வேலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "தெரியாத வயதில் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவிட்டு வந்து, ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருந்தி வாழும் என்னை, போலீஸார் தொந்தரவு செய்யுறாங்க, கேஸ் போட ஆளில்லன்னா என்மீது வழக்கை போட்டுடுறாங்க, இனி சாவதை விட வேற வழி தெரியல" என்கிறார் சிங்காரவேலன்.
“என் வீட்டுக்காரர் பேக்கரியில ராத்திரி பகலா கூலி வேலை செய்றதால எங்க வயிறு நிறம்புது. எப்பவோ தெரியாத வயதில் செய்த தவறுக்கு தண்டனையும் அனுபவிச்சிட்டார். ஆனாலும் நாகை நகர போலீசார் விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுக்குறாங்க. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் சிங்காரவேலனின் மனைவி.