நாகையில் கூலித்தொழிலாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வெளிப்பாளையம் அருகே உள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்த பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கூலி வேலை செய்துவருகிறார். கணவரை இழந்த இவர், பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் மட்டும் தன்னுடைய சகோதரி வீட்டிற்குச் சென்று தங்கிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று (07/01/2021) இரவு, வழக்கம் போல் சகோதரி வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் பின்தொடர்ந்து, கவிதாவை அருகில் உள்ள கோயிலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள், அவரின் சகோதரி வீட்டிற்கும் சென்று மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் காவல்துறையினர், உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதிக்குச் சென்று வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட கவிதா, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில், இரண்டு பேரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்திவரும் நிலையில், தற்பொழுது, கூலித்தொழிலாளி பெண்ணை இரவு நேரத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடரும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இந்த சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் காரணம், இந்தப் பகுதியில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் மதுபோதைக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக, நாகை பேருந்து நிலையத்திற்கு அருகில் மருத்துவமனை உள்ளது. அதற்கு அருகிலேயே டாஸ்மாக் இருக்கிறது. அதேபோல் அங்குள்ள முக்கியப் பகுதிகளிலேயே சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கூட்டமாக அமர்ந்துகொண்டு மது அருந்தும் கலாச்சாரம் ஏற்பட்டுள்ளது. இதனையெல்லாம் தடுக்க போலீசார் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.