Skip to main content

மீனவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்; கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Published on 21/12/2024 | Edited on 21/12/2024
nagai dt Kodiakarai fishermen incident

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் நேற்று (20.12.2024) மதியம் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அந்த வகையில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 3 மீனவர்களுடன் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அதன்படி மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, கட்டையைக் கொண்டு மீனவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீன்பிடி வலைகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலில் இருந்து தப்பி கரை சேர்ந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயமும், நாகலிங்கத்திற்கு உள்காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போன்று பெருமாள் பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர், ஜெகன் மற்றும் லட்சுமணன் ஆகிய இரு மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். உபகரணங்களையும் பறித்துச் சென்றுள்ளனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்