இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடங்கப்படும். 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்க ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் இலவச பேருந்து சேவையான 'விடியல் பயணம் திட்டம்' நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 15 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ. 300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர் கல்விக்கடன் வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ. 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 370 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் ரூ. 120 கோடியில் புதியதாக சிப்காட் பூங்கா அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும். மதுரையில் 25,000 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.