கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது மூங்கில்துறைப்பட்டு. இதனருகில் உள்ள மணலூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். விவசாயியான இவரும் இவரது மனைவி சரோஜாவும் விவசாயத் தொழில்கள் செய்வதோடு கூடுதல் வருமானத்திற்காக 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்த ஆடுகளை கல்வராயன் மலைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். பின்பு மாலை நேரத்தில் தங்கள் நிலத்தில் கொண்டு வந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவார்கள்.
மீண்டும் தினசரி காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இது போன்று நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல தேவராஜ் மனைவி சரோஜா பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கே அவர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் பத்து ஆடுகள் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளன. மேலும், 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரோஜா தனது கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் துரைசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். கால்நடை மருத்துவர் துரைசாமி விரைந்து சென்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து ஆய்வு செய்ததோடு படுகாயமடைந்து ஆடுகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
இறந்த ஆடுகளைப் பிரேதப் பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு சங்கராபுரம் தாசில்தாருக்கு ஆடுகள் இறந்ததற்கான அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளார். மேலும், கடந்த 14ஆம் தேதி இதே போன்ற சம்பவத்தில் 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்டு இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து நடு இரவில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளைத் தாக்கி கடித்துக் குதறிச் சாகடிக்கும் மர்ம விலங்கு என்னவாக இருக்கும் அதைத் தேடிப்பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"இறந்துபோன ஆடுகளுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும், மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த விலங்கைப் பிடிக்க வேண்டும்" என்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் ஆடு மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடுகளைக் கடித்துக் குதறிச் சாகடித்து வரும் மர்ம விலங்குகள் ஆட்டத்தினால் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குப் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகளும் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விரைவில் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.