சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவி பொது பிரிவாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர்.
இதில், மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட ராஜா கவுண்டரின் பெயர் கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 7ல் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த துணை வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, வெள்ளக்கல்பட்டி ஊராட்சிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த அவருடைய பெயரும் நீக்கப்பட்டது.
இதேபோல் கொளத்தூர் ஒன்றியத்தில் நவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மலர்க்கொடி என்பவரின் பெயரும் கடந்த மாதம் 23ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சையால், ஜனவரி 2ம் தேதி, நவப்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஆகிய இரு ஊராட்சிகளிலும் தலைவர் பதவிக்கான வாக்குகள் மட்டும் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தலைவர் பதவிக்கான வாக்குகள் மட்டும் தனியாக பிரித்து பிரத்யேக பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் அந்த வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட இரு ஊராட்சிகளிலும் தலைவர் பதவிக்கான வாக்குகளை ஜன. 8ம் தேதி (இன்று, புதன்கிழமை) எண்ணுமாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இன்று (08.01.2020) காலை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் வெற்றி பெறக்கூடியவர்கள் நாளையே (9ம் தேதி) தலைவர்களாக பதவியேற்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.