நேற்று முன்தினம் பெண்ணாடம் அருகிலுள்ள தாழநல்லூர் ஏரிக்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற விழல் புல் நிரம்பிய புதற்பகுதியில் இருசக்கர வாகனம் யார் கண்ணிலும் தென்படாமல் மர்மமான முறையில் கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீஸார் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தை மீட்டெடுத்தனர்.
அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் இந்த இரு சக்கர வாகனம் யாருடையது, இங்கே கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது யார் என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள யாருக்கும் அந்த இரு சக்கர வாகனம் சொந்தமானதில்லை, அதை யார் இங்கு கொண்டுவந்து போட்டார்கள் என்பதும் தெரியவில்லை, என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த இருசக்கர வாகனம் சென்னை பதிவெண் கொண்டது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்த போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அதே பெண்ணாடம் அருகே உள்ளது பெலாந்துறை என்ற கிராமம். அங்கிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோணம் என்ற ஊருக்குச் செல்லும் சாலையோர பகுதியில் நேற்று மாலை மர்மமான துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. இதை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாகப் பார்த்துவிட்டு, யாரும் அதைத் தேடி வந்து எடுத்துச் செல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து அங்கு கிடந்த துணிப்பையை மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே இரண்டு ஏடிஎம் கார்டுகள், ஆயிரம் ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனத்தின் சாவி, வீட்டுச் சாவி, மின் கட்டண ரசீது, ஆகியவையும், சாலைப் பணியாளராக வேலை செய்யும் ஒருவரது அடையாள அட்டையும் இருந்துள்ளது.
இதையடுத்து அந்த அடையாள அட்டையிலிருந்த முகவரியில் போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்மூலம் பையின் உரிமையாளர் மருவாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்களது உறவினர் ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அதில் மாட்டியிருந்த பை தவறி விழுந்ததைக் கவனிக்காமல் சென்றுள்ளதை விசாரணையில் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார் அவரிடம் பொருட்களை அடையாளம் காட்டச் சொல்லி ஒப்படைத்தனர். அதோடு இதுபோன்ற அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.