சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் தொன்மைவாய்ந்த மயில் சிலை இருந்ததாகவும் 2004 ஆம் ஆண்டுக்கு பின் திடீரென அந்த சிலை காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மயில் சிலை மட்டுமல்லாது அக்கோவிலில் இருந்த ராகு-கேது சிலைகளும் மாயமானதாக தொடர் புகார்கள் எழுந்தது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்குக்கு பின்னர் புன்னைவன நாதர் கோவில் சன்னதியில் இருந்த தொன்மைவாய்ந்த மயில் சிலைக்குப் பதிலாக வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் உண்மையான சிலை திருடப்பட்டது என்று புகார் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மயில் சிலையை தேடி வந்தனர். காணாமல் போன தொன்மைவாய்ந்த அந்த மயில் சிலை கபாலீஸ்வரர் கோவில் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தீயணைப்புத் துறையினர் தெப்பக்குளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்கூபா வீரர்களும் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் 5 அடிக்கு சேறு சகதி இருப்பதால் சிலையைத் தேடுவதில் சிரமம் உள்ளதாக தேடுதல் குழுவினர் தெரிவித்துள்ளனர். சிலைகளை தற்போதுவரை கண்டறிய முடியாத நிலையில் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் சிலைகளை கண்டறியும் பணியில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.