இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்தது. இதனையும் மீறி, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு முதல் மக்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் மீது இருந்த கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலைகளில் இன்று மாலை 06.30 மணியளவில் ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்தது. கோவில் அருகில் ராக்கெட் பட்டாசு வெடித்த போது பறந்து சென்ற பட்டாசு கோயிலின் கோபுரத்தில் இருந்த ஓலையில் விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.