தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டி பகுதியில் 25 இடங்களிலும், கரூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பாலக்காடு, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.