Skip to main content

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..! சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்..!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
1


வடகாடு முத்துமாரியம்மன் கோயில் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதற்காக பல்வேறு கிராம மக்களும் சீர்கள் கொண்டு வந்தனர். வடகாடு இஸ்லாமியர்களும் பணத்துடன் சீர் கொண்டு வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
 

1


இந்த நிலையில் கோயில் கோபுரம் மற்றும் கல்மண்டபம், பிரமாண்ட ராஜகோபுரம், திருப்பணிகள் கிராமத்தார்கள் மற்றும் உபயதாரர்களின் உதவியுடன் செய்து முடிக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

பெரும் பொருட் செலவில் கிராம மக்களின் முடிவின்படி திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு கோயில், ராஜகோபுரம் திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டது முதல் கிராமத்தில் பலர் அசைவ உணவை தவிர்த்தனர். அதன் பிறகு பந்தல்கால் நடும் நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் மஞ்சள் உடை அணிந்து விரதம் தொடங்கிய நாளில் இருந்து வடகாடு கடைவீதியில் கறி, மீன், போன்ற அசைவ உணவு வகைகள் விற்பனை நிறுத்தப்பட்டதுடன் அப்பகுதியில் உள்ள உணவுவிடுதிகளிலும் அசைவ உணவுகள் விற்பனை நிறுத்தப்பட்டது. பந்தல்கால் நடப்பட்டது முதல் இரவு நேரங்களில் கோயில் வளாகத்தில் பெண்களின் கும்பியும், ஆண்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடந்து வந்தது.
 

1


சீர்வரிசைகளுடன் வந்த கிராம மக்கள்:

வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் எந்த கிராமத்தில் கோயில் குடமுழுக்கு, அல்லது கோயில் நிகழ்ச்சிகள் நடந்தாலும் மற்ற கிராமத்தினர் பட்டு, பூ, பழம், தேங்காய் போன்ற பொருட்களுடன் கிராம மக்கள் ஊர்வலமாக வந்து மரியாதை செய்வது வழக்கம். அதே போல வடகாடு முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மாங்காடு, கொத்தமங்கலம், மற்றும் சுற்றியுள்ள பல கிராமத்தார்களும் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்தனர். சீர்வரிசைகளுடன் வந்த கிராமத்தார்களை வடகாடு கிராமத்தார்கள் சந்தனம் கொடுத்து கும்பிட்டு அழைத்தனர். இந்த கிராம வழக்கம் தொன்று தொட்டு வருவதாக கூறுகின்றனர்.
 

1


மாலையில் வடகாடு பேட்டை பகுதி இஸ்லாமியர்கள் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்காக கிராம வழக்கப்படி பூ, பழம், தாம்பூலத்தில் வைத்து அதில் குடமுழுக்கு நிதிக்காக பணம் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து விழாக்குழுவினரிடம் கொடுத்தனர். இஸ்லாமியர்களும் இந்து கோயிலுக்கு சீர் கொண்டு வந்த நிகழ்ச்சியை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

வடகாடு அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம். உறவு கிராமங்களம் அதிகமாக உள்ளது. மேலும் புதுக்கோட்டை தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு காணவருவார்கள் என்பதால் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் சுமார் 500 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கணினி கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
 

1


குடமுழுக்கை காண பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்த பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெறிசலை தவிர்க்க தடுப்புகள் அமைக்கபட்டுள்ளது. பக்தர்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோயிலின் 4 பக்கத்திலும் சுமார் 6 இடங்களில் அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலிசாரும், குடமுழுக்கு மற்றும் அன்னதான ஏற்பாடுகளை வடகாடு முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா குழுவினரும் கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்