தமிழ்நாட்டில் இருக்கும் பல தொழிற்சாலைகள், கட்டிடங்கள், நிலங்கள் என எல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பினாமியாக இருப்பதனாலேயே மத்திய அரசை கண்டு தமிழக அரசு அஞ்சி நடுங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஜமாத் தலைவர் புருஹானுதீன் தலைமையில் 10 வது நாளாக நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றாமல் அதனை திசை திருப்ப பார்க்கிறது. மோடி அரசும், எடப்பாடி அரசும் மக்களின் உணர்வுகளுக்கும், ஜனநாயக பூர்வமான போராட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்.
தவறான சட்டம் என்று தெரிந்திருந்தும், மத்திய அரசை கண்டு தமிழக அரசு அஞ்சி நடுங்குவதன் காரணமாகவும், மடியில் கணம் இருப்பதன் காரணமாகவும் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல தொழிற்சாலைகள், கட்டிடங்கள், ஏராளமான நிலங்கள் என எல்லாமே தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பினாமியாக இருப்பது, இப்போது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்து விட்டது. இது தான் மடியில் கணம் என்றேன்" என தெரிவித்தார்.