கரோனோ தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் திருச்சியில் புறநகர்ப் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் குற்றவாளிகளை விசாரித்த காவலர்கள் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். காரணம் குற்றவாளியின் மனைவி ஒருவருக்கு கரோனோ தொற்று உறுதியானதை அடுத்து அனைத்துக் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முசிறி அடுத்த தின்னகோணம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி நதியா (வயது 28). இவர் அருகில் உள்ள வெள்ளூர் பகுதி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நதியா குளிக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
இது சம்பந்தமாக நதியா தன் கணவர் செந்தில்குமார் உடன் வந்து முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பால்ராஜ் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், ராம்குமார், பிரகாஷ் ஆகிய 4 இளைஞர்களையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நான்கு பேரில் ராதாகிருஷ்ணனின் மனைவி ஜானகி 9 மாத கர்ப்பிணி, இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஜானகிக்கு கரோனோ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த டெஸ்ட் ரிசல்ட் 22.06.2020 அன்று பாசிட்டிவ் என வந்து உள்ளது.
பெண்ணை படம் எடுத்து விசாரணைக்கு அழைத்து வந்த ஜானகியின் கணவர் ராதாகிருஷ்ணனுக்கும் ஏதேனும் தொற்று இருக்குமா? என்கிற அச்சத்தில் விசாரணை செய்த காவலர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற பயத்திலும் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு 36 காவலர்களும் எஸ்.பி. திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அனைவரையும் டெஸ்ட் எடுத்து சுகாதார துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் தற்போது முசிறி E1 காவல் நிலையம் தற்சமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
சுகாதாரத்துறையினர் 36 காவலர்களைத் தனிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆற்றங்கரையில் குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த வழக்கில் விசாரிக்க போய் கரோனோ தொற்று பயத்தில் காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது முசிறி பொதுமக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.