தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளான திருத்தணி, பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் உட்பட நூற்றுக்கணக்கான முருகர் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்னகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் பாலமுருகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகமும் மற்றும் தங்க அங்கி அலங்காரமும் செய்யப்பட்டு மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பாலமுருகப் பெருமான் மயில் மீது அமர்ந்தபடி பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாளித்தார். அடுத்ததாக தங்க ரதத்தை பக்தர்கள் இழுத்துச் செல்ல கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.
இந்த தைப்பூச நிகழ்வின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குடும்பம் குடும்பமாக வருகை தந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.