புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரவேலின் மகள் கஸ்தூரி (19) ஆலங்குடியில் உள்ள வெங்கடேஷ்வரா மருந்துக்கடையில் கடந்த 28 நாட்களாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் 28 ந் தேதி ஞயிற்றுக் கிழமை வேலைக்குச் சென்ற கஸ்தூரி வீட்டுக்கு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். மருந்துக்கடைக்கு எதிரில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டும் அதிரான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (28) என்பவர் அழைத்துச் சென்ற தகவல் அறிந்து 31 ந் தேதி நாகராஜனை கைது செய்த போலிசார் விசாரணை செய்தபோது, கஸ்தூரி தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்கு செல்லும் காட்டாற்றில் கிடப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ஆலங்குடி போலிசார் மல்லிபட்டினம் சென்று சடலத்தை மீட்டு வந்தனர். அதுவரை கஸ்தூரியுடன் உல்லாசமாக இருந்தபோது மாரடைப்பு எற்பட்டு இறந்துவிட்டார்.
நான் ஒருவனே சடலத்தை ஆற்றில் வீசினேன் என்று வாக்குமூலம் கொடுத்த நிலையில் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். கஸ்தூரியின் உறவினர்கள் பனங்குளம் பாலம், பெரியாளூர் இணைப்புச்சாலை, வடகாடு, கீழாத்தூர், புள்ளாண்விடுதி மற்றும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களை தீ வைத்து எரித்தும் போக்குவரத்தை முடக்கினார்கள். இதனால் 7 மணி நேரத்திற்கு பட்டுக்கோட்டை – அறந்தாங்கி, பட்டுக்கோட்டை – பேராவூரணி – புதுக்கோட்டை சாலைகள் முற்றிலும் போக்குவரத்து முடங்கியது. இந்த நிலையில் பனங்குளம் பாலத்தில் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். பிரேதப் பரிசோனைக்கு தங்கள் தரப்பு மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும். பிரேதப் பரிசோதனையை முழு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து நாகராஜனிடம் நடத்திய விசாரணையில், தைல மரக் காட்டுப்பகுதியில் சம்பவம் நடக்கவில்லை, ஆலங்குடியிலுள்ள தனது சித்தி வீட்டில் சம்பவம் நடந்ததாகவும் கஸ்தூரி இறந்த பிறகு அவரது உடலை மறைக்க தனது உறவினர்கள் உதவி செய்ததாகவும் கூறியதாக தெரியவருகிறது. மேலும் விசாரணை தொடர்வதால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் வெளிவரலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 1 ந் தேதி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில் கஸ்தூரி உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள், தடயங்கள் சேகரிப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக் கிழமை வரை சம்மந்தப்பட்ட போலிசார் அதனை பெற்ற நீதிமன்றத்தில் கடிதம் பெற்று பரிசோதனைக்காக திருச்சி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியதாக தெரியவில்லை. அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் 7 ந் தேதிக்கு பிறகே உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
கால தாமதம் ஏற்படுவதால் உறுப்பகளில் சிதைவு ஏற்பட்டு ஆய்வில் சரியான முடிவுகள் தெரிய வாய்ப்புகள் உள்ளதா என்று உறவினர்கள் வினா எழுப்பி உள்ளனர். வெள்ளிக் கிழமை இரவு கஸ்தூரி வீட்டுக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன்.. கஸ்தூரி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையில் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சடலத்தை மறைக்கவும் பலர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களை அனைவரையும் காவல் துறை பாரபட்சம் இன்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொலை சம்பவத்தில் சரியான தடயங்களை சேகரித்து வழக்கில் இணைக்க வேண்டும். கைது நடவடிக்கைகள் தாமதம் ஏற்படும் நிலையில் சி.பி.எம், மாதர்சங்கம் கஸ்தூரியின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டங்களை நடத்துவோம் என்றார். இந்த நிலையில் இன்று அல்லது நாளை கஸ்தூரி மரணம் சம்மந்தமாக சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.