Skip to main content

அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் உருவப்படம் திறப்பு!

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
Murasoli Selvam's portrait unveiled at Anna Institute

முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், எழுத்தாளரும், முரசொலி பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி (10.10.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் முரசொலி செல்வத்தின் உருவப் படத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (21.10.2024) திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்துக் குழுமத்தின் இயக்குநர் என். ராம், திரைப்பட நடிகர் சத்யராஜ், பேராசிரியர் மு. நாகநாதன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிருவாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்தவர் முரசொலி செல்வம். நான் பங்கேற்கும் திமுக தேர்தல் பரப்புரை கூட்டங்களைப் பார்த்துவிட்டு முரசொலி செல்வம் எனக்கு அறிவுரை கூறுவார். முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும். அதன்படி திராவிட இயக்க படைப்புகள், படைப்பாளர்களுக்கு இந்த அறக்கட்டளையின் சார்பில் விருதுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்