Skip to main content

முரசொலி செல்வத்தின் உருவப்படம் திறப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கம்!

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி (10.10.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் முரசொலி செல்வத்தின் உருவப் படத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (21.10.2024) திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்துக் குழுமத்தின் இயக்குநர் என். ராம், திரைப்பட நடிகர் சத்யராஜ், பேராசிரியர் மு. நாகநாதன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிருவாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “மறைந்த முரசொலி செல்வத்தின் உருவப் படத்தினைத் திறந்து வைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்த மைக்குக்கு முன்னால் நின்று பேசலாமா அல்லது தவிர்த்துவிடலாமா என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு மனக்குழப்பத்திலே நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை, என்னுடைய தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 10ஆம் தேதி அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைத் தயாநிதி தான் முதன்முதலில் எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 10 மணியளவில் என்னிடத்தில் சொன்னார். அதிர்ந்துவிட்டேன். நம்ப முடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் கிடையாது. ஏதேனும் உடல் கோளாறு ஏற்பட்டு அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாரா என்றால் இல்லை. எனவே, அப்படிப்பட்டவர் மறைந்துவிட்டார் என்று சொல்கிறபோது என்னால் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

அவர் மறைவதற்கு முதல் நாள் மாலை என்னுடைய தங்கை செல்வியிடத்தில் பேசியிருக்கிறார். கலாநிதி மாறனிடத்தில் பேசியிருக்கிறார். அவருடைய மகள் எழிலரசியிடம் பேசியிருக்கிறார். என்னுடைய தம்பி தமிழரசு உடன் பேசியிருக்கிறார். ஏன் என்னிடத்திலும் பேசினார். ‘நாளை நான் சென்னைக்கு புறப்பட்டு வருகிறேன்’ என்று சொன்னார்; வந்தார். உயிருடன் வரவில்லை. உடல் மட்டும்தான் வந்தது. நம்மையெல்லாம் ஒரு சோகச் சூழ்நிலையில் அவர் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.

கலைஞருடைய அக்கா மகன் அதனால்தான் இங்கே எல்லோரும் சொன்னார்கள் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சர் ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவைப் போற்றக்கூடிய வகையில் அவருக்குச் செல்வம் என்று கலைஞர் தான் பெயர் சூட்டினார். மார்ச் மாதம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்  மறைந்தார்கள். ஏப்ரல் மாதம் முரசொலி செல்வம் பிறந்தார். அவரது நினைவாக அவருடைய பெயர் சூட்டப்பட்டது. எப்படி அவருக்கு அவருடைய நினைவாகப் பெயர் சூட்டப்பட்டதோ, அதேபோல் எனக்குத் தங்கை பிறந்தபோது கலைஞர் செல்வி என்று பெயர் சூட்டி அப்போதே திருமணத்திற்கான முடிவை எடுத்துவிட்டார்கள்.

CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

கலைஞரைப் பொருத்தவரையில் செல்வத்திற்கு இரண்டாம் தாயாக, செல்வத்தை வளர்த்தவராக இருந்தார். கலைஞருடைய வார்ப்பாக செல்வம் விளங்கினார்கள். நாங்களெல்லாம் அவரை மாமா, அத்தான் என்ற உறவுமுறைகளை அழைப்பதாக இருந்தாலும், அத்தனைபேரும் ‘குட்டி அத்தான், குட்டி அத்தான்’ என்றுதான் செல்லமாக அழைப்பதுண்டு. ஆனால், எங்களைப் பொருத்தவரையில் அது நானாக இருந்தாலும் சரி, தம்பி தமிழாக இருந்தாலும் சரி, அண்ணன் அழகிரியாக இருந்தாலும் சரி அவரை அண்ணன், அண்ணன் என்றுதான் அழைப்போம். காரணம், அவர் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனாக இருந்து அறிவுரைகளை, ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் கலைஞர் மறைவிற்குப் பிறகு பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு, முரசொலி செல்வத்தின் மறைவிற்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருக்கிறேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும். எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும். எப்படி நோட்டீஸ் போட வேண்டும். எப்படி போஸ்டர் அடிக்க வேண்டும். என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் எனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.

CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் கட்சி நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே என்னை அழைத்து  ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பாயிண்டில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று எனக்குப் பயிற்சி அளித்தவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது நான் வேதனைப்படுகிறேன். அவர் பெங்களூருக்குச் சென்று செட்டிலானதற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு 25-30 ஆண்டு காலமாகியிருக்கிறது. ஆனால் மாதத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சென்னைக்கு வந்துவிடுவார். கட்சியின் முக்கியமான நிகழ்ச்சி, முப்பெரும் விழா நிகழ்ச்சி, கலைஞரின் பிறந்தநாள், வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால் அதற்கு; இப்படி மாதத்திற்கு ஒருமுறையாவது, இரண்டு முறையாவது சென்னைக்கு வருவார்.

இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் தங்கிவிட்டுப் போவார். வருகின்ற செய்தி எனக்குச் சொல்லிவிடுவார். அவர் சென்னைக்கு வந்தவுடன் மாலையில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிடுவேன். நான் மட்டுமல்ல; அண்ணன் துரைமுருகன், இங்கே இருக்கக்கூடிய இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள்; திமுக முன்னணியினர்; அனைவரும் போய்விடுவோம். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளை எங்களுக்கு எடுத்துச் சொல்வார். நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். நாங்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய செய்தியை அறிந்து கொள்வதைவிட பெங்களூரிலிருந்து அதிகமான செய்திகளை அறிந்து எங்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்வார். அந்த அளவிற்குத் துணை நின்றவர் செல்வம்.

CM MK Stalin speech on Murasoli Selvam portrait unveiling function

திமுகவின் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, தேர்தல் களத்தில் பிரசாரக் கூட்டங்கள் அல்லது அரசு நிகழ்ச்சிகள் என நான் கலந்து கொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள். அந்தக் காட்சிகளை முழுமையாகப் பார்ப்பார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் காரில் வந்து ஏறுவேன். அவ்வாறு ஏறியவுடன் முதல் அழைப்பு அவருடைய அழைப்பாகத்தான் இருக்கும். அவர் அழைக்காவிட்டாலும் நான் அழைத்து விடுவேன். அவர் அந்த அழைப்பில், ‘இப்படி எல்லாம் பேசினாய், மிகவும் சிறப்பாக இருந்தது; எழுச்சியாக இருந்தது. இன்னும் இவ்வாறு மாற்றிப் பேசி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்’ என்றெல்லாம் அறிவுரை சொல்வார். ஒன்று விடாமல் பார்த்து விடுவார். தொடர்ந்து எனக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். காலை, மாலை என்று இரண்டு முறையாவது எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகின்ற வழக்கத்தை நாங்கள் பெற்றிருந்தோம்.

தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், அவன் நல்லவனோ கெட்டவனோ, அவன் எதிரியா  நண்பனா என்று அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு நல்ல காரியத்தைத்தான் அவர் தொடர்ந்து செய்திருக்கிறார். அதுதான் உண்மை. எனவே, இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் நான் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன், முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது, அந்தப் பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்குவது என முடிவு செய்திருக்கிறோம். இதைத்தொடர்ந்து இங்கு திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி  வைத்த வேண்டுகோளான, முரசொலி செல்வத்தின் பெயரில் ‘திராவிட இதழியல் பயிற்சிக் களம் ஒன்றை கல்லூரியாக உருவாக்க வேண்டும்’ என்ற அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்