முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி, அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாகா பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று தேர்தலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் அரசியல் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்தவற்றைக் கீழே தொகுத்துள்ளோம்.....
“யூனியன் பிரதேசமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். இதன் மூலம் ஜனநாயகம் மீண்டும் திரும்பி இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். உமர் அப்துல்லா பதவியேற்ற பிறகு மத்திய அரசு அவரின் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியையும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் எந்த அளவிற்கு மோடி விமர்சித்து பேசினார் என்பது மக்களுக்கு தெரியும். அதனால் உமர் அப்துல்லாவுக்கு மோடி வெறும் கடமைக்காக மட்டுமே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் பிற தலைவர்கள் இந்தியா கூட்டணியின் உமர் அப்துல்லா பதவியேற்புக்கு சென்றிருப்பது அங்குள்ள மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்திருக்கிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றதுபோல் அங்கு நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க உமர் அப்துல்லா எடுத்த முடிவு மிகவும் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது. பதவியேற்பின்போது உமர் அப்துல்லா, துணை நிலை ஆளுநராக இருக்கக்கூடிய மனோஜ் சின்ஹாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் பதிலுக்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வது ஆளுநரின் வேலை என்றும் அதைக் கேட்டு பெறுவது மாநில அரசின் கடமை என்று வலியுறுத்தினார்.
முதலமைச்சர் என்ற முறையில் உமர் அப்துல்லா அங்கு ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சியைச் செய்யக்கூடிய கடமை இருக்கிறது. அதே போல் முதல்வருக்கு கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பை மோடி கொடுக்காவிட்டால் ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மிகப்பெரிய அவமரியாதை அவர் சந்திக்க நேரிடும். இதனால் ஜம்மு பகுதியில் பா.ஜ.க. இருபான்மையாக இருப்பதாக கூறி அரசியல் செய்யலாம் நினைத்து வைத்திருப்பதைக் கிடப்பில் வைத்திருப்பார்கள். தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால் வணிகம் அங்கு சரிவர நடக்கவில்லை. விரைவில் வணிகத்தை பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் தான் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறும். எனவே இதற்காக பொறுமையாக பா.ஜ.க.வும் இருக்க வேண்டும். நிதானமாக உமர் அப்துல்லாவும் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது” என்றார்.