சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 21 ஆசீட் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தது மன நிறைவாக இருக்கிறது. கோயிலுக்கு சென்று கடவுளை பார்ப்பதை விட இந்த மாதிரி கடவுள்களை பார்ப்பது அபூர்வமான விஷயம். ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே இருக்கிறார்கள். கண்ணாடி கூட பார்கக் கூடாது என்ற உணர்வோடு இருக்கிறார்கள். அவர்களை வெளியில் கொண்டு வந்து அழகு படுத்தி ஃபேஷன் ஷோ போல இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை ஏற்பாடு செய்த ஸ்ருதி கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். அழகு என்பது மனதுக்குள் இருப்பதுதான். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதுதான் அழகு.
அவர்களுக்கு விருது கொடுத்தது பெருமையாக இருந்தது. எனக்கும் விருது வழங்கினார்கள். அந்த விருது தேசிய விருதை விட முக்கியமானதாக பார்க்கிறேன். பொதுவாக எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இது மாதிரியான விருதுகள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எப்போது உதவி கேட்டாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.
அவரிடம் த.வெ.க. மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “ஒரு வாக்காளனாக அவர் அழைக்காவிட்டாலும் கலந்து கொள்வேன். அவர் என்ன பேசுகிறார் என்பதை மக்கள் மத்தியில் ஓரமாக நின்று பார்ப்பேன். ஒரு புது அரசியல்வாதியாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும். அதை டிவி-யில் பார்ப்பதை விட நேரில் பார்ப்பது நல்லது” என்றார். அவரிடம் த.வெ.க.-வில் விஷால் இணைந்துவிட்டாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது பற்றி இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. அவர்கள் முதலில் மாநாடு நடத்தட்டும். இப்போதுதான் முதல் அடி அவர் வைக்கிறார். வைக்கட்டும். அவரது செயல்பாடுகள் பொருத்தே சொல்லமுடியும். கட்சியில் சேருவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை” என்றார்.