தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாகப் பேருந்துகள் இயக்கப்படாததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்கள் வருகை இல்லாததாலும் விருத்தாசலம் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனை பயனுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்த விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் நாராயணன், அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி பணியாளர்கள் பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவு நீர் முழுவதையும் அகற்றினர். சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், அனைத்தும் கிழிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஊற்றிக் கழுவப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கை கழுவும் வசதிகள் மற்றும் நகராட்சி சார்பில் பாலக்கரை, கடைவீதி, காட்டுக்கூடலூர் ரோடு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி அமைத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இதுபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் சமயத்திலும் வெவ்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் அனைத்தும் நடைபெறுமென ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.
இதனிடையே விருத்தாசலம் பேருந்து நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டாலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. அதனால், சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளதால் பொதுமக்கள் புழங்க முடியாமல் அவதிப்படுவதாகவும், மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர். எனவே நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.