சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சீனா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரசுரமன். கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள். பதிவுத்துறையில் சார் பதிவாளராக உள்ளார். இவர்களுடைய மகன் அருண்பிரசாத். மருத்துவர். எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
அங்குள்ள ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் சீனா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் என்ற இளம்பெண், தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அருண்பிரசாத், கிறிஸ்டல் ஜியாங்கும் பகுதி நேரமாக வேறு ஒரு நிறுவனத்திலும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அப்போது இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்தப் பழக்கம் காதலாக கனிந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அருண்பிரசாத்தான் தனது காதலை முதலில் கிறிஸ்டலிடம் கூறியிருக்கிறார். இதற்கு ஆரம்பத்தில் அவர் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். அன்னலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள். இரு மனங்கள் ஒன்றானபின் அடுத்து திருமணம்தானே? என்னதான் வெளிநாட்டில் பணி, அந்நிய நாட்டுப் பெண்ணைக் காதலித்தாலும் மருத்துவர் அருண் பிரசாத், பெற்றோர் சம்மதத்துடன் காதலியைக் கரம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து அவர், தான் விரும்பும் பெண்ணையே மணம் முடித்து வைக்குமாறு சேலத்தில் உள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் இதைக்கேட்டு திகைப்படைந்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். கிறிஸ்டல் ஜியாங்கும் தனது பெற்றோரிடம் அருண்பிரசாத்தை மணம் முடிக்க சம்மதம் பெற்றார்.
காதல் கல்யாணத்தில் கைகூடும் வேளை நெருங்கி வந்தது. இந்நிலையில்தான் சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் அவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. சேலம் பேராயர் சிங்கராயன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தினார்.
பின்னர், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) நடந்தது. அருண்பிரசாத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். மணப்பெண் கிறிஸ்டல் ஜியாங் தரப்பில் அவருடைய பெற்றோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இதுகுறித்து மருத்துவர் அருண்பிரசாத் கூறுகையில், ''நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக காதலித்தோம். இருவரின் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம். தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது கிறிஸ்டல் ஜியாங் மட்டுமின்றி அவருடைய பெற்றோருக்கும் ரொம்பவே மதிப்பு உண்டு,'' என்றார்.
இன்னும் சில நாள்களில் புதுமணத் தம்பதி, ஆஸ்திரேலியா சென்று பணிகளைத் தொடர இருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் இருவருக்கும் பெண் வீட்டார் தரப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடி வந்த தமிழர்கள் அண்மைக் காலங்களாக மணப்பெண்களையும் தேடி வருவது கணிசமாக அதிகரித்துள்ளது.