பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பை கடந்து அவர்களின் விளையாட்டுகளை சோதனை செய்து அவர்களை விளையாட்டு வீரர்களாக்குவதும் ஒவ்வொரு பள்ளியின் கடமை. ஆனால் ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பினால விலை உயர்ந்த விளையாட்டு உபகரணங்கள் ஒரு இருட்டறையில் முடக்கப்பட்டுடிருந்தாலும் பாதிக்கும் மேல் ஒரு சிலர் வீடுகளில் உள்ளதாக மாணவர்கள் குமுறுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 920 மாணவர்கள் வரை படிக்கிறார்கள். இந்த பள்ளியில் தான் விலை உயர்ந்த விலையாட்டு உபகரங்கள் விளையாட்டு மாணவர்களுக்கு எந்த பலனும் இன்றி இருட்டறையில முடக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பெரிய விளையாட்டுத் திடல் கொண்ட பள்ளியும் அறந்தாங்கி தான். ஆனால் விளையாட்டு திடலும் மாணவர்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் கரடும்முரடுமாக காட்சி அளிக்கிறது. ஒரு நாள் மழை பெய்தாலும் நகரத்தில் உள்ள அத்தனை தண்ணீரும் விளையாட்டு திடலில் தான் சேமிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு விளையாட்டு அப்படின்னா என்ன என்று கேட்கும் நிலையில் தான் உள்ளது.
சில முன்னால் மாணவர்கள் கூறும் போது.. அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்த மாணவர்கள் இந்த விளையாட்டு திடலில் பயிற்சி பெற்று மாநில அளவில் பல போட்டிகளிலும் சாதித்து இன்று பல அதிகாரிகளாக உள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பெரிய விளையாட்டுத்திடலில் பள்ளி அளவிலான போட்டிகளை கூட நடத்த லாயக்கற்று கிடக்கிறது எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக கிடக்கும் வாக்கிங் போக முடியாது. ஓட்டப்பந்தயத்திற்கு ஓடி பயிற்சி எடுக்க முடியாது. அதனால சமீபகாலங்களாக இந்த பள்ளியில் இருந்து எந்த மாணவரும் விளையாட்டு வீரராக வெளியே வர முடியாத அவலநிலை உள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயம் சண்முகம் (தி.மு.க) விளையாட்டு மேம்பாட்டு துறையிலிருந்து பெரிய போட்டிகளில் பயன்படுத்தப்படும் நவீன, விலை உயர்ந்த விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். அதன் விலை ரூ. 15 லட்சம் வரை இருக்கும். அந்த உபகரணத்தை வைத்து பயிற்சி பெற்றிருந்தால் இன்று பெரிய சாம்பியன்களை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் ஒரு இருட்டறையில் பாதி உபகரணங்களும் மீதி ஒருசிலர் வீடுகளிலும் முடக்கப்பட்டுள்ளது.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பள்ளி அளவிலான விளையாட்டுகளை கூட இங்கே நடத்த லாயக்கற்ற விளையாட்டு திடலாகிவிட்டது. ஒரு மாணவன கூட சாதிக்க முடியவில்லை.
பக்கத்தில் 15 கி.மீ தூரத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு திடல் 15 அடி நீளம் 20 அடி அகலம் அவ்வளவு தான். ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து பயிற்சி கொடுத்த மாணவிகள் மண்டல, மாநில அளவு போட்டிகளில் பங்கேற்றார்கள். ராணுவ அணிவப்பு போல அணிவகுப்பு நடத்தி மாவட்ட அளவில் பரிசும் வாங்கினார்கள். ஆனால் இவ்வளவு பெரிய விளையாட்டு திடல் உள்ள அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி படுமோசமாகிவிட்டது.
இதை மாவட்ட விளையாட்டு அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இனிமேலாவது அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் இனி மேல் உள்ள மாணவர்களாவது பயனடைவார்கள். விளையாட்டு உபகரணங்கள் அறைக்குள் முடக்கப்பட்டுள்ளது. நமக்கு விளையாட்டு பயிற்சி கிடைக்காது என்றே பல விளையாட்டு ஆர்வமுள்ள மாணவர்கள் வெளியூர் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். பலர் தனியார் பயிற்சி மையங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுப்பது யார்?