தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பிரதான அணைகள், ஏரிகள் நிரம்பிவருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளான நிலையில், எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளது.
152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், நீர் மட்டம் 141 அடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து 3,348 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2,300 கனஅடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துரை என இடுக்கி அணை வரையிலான நீரோட்ட பாதைகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். கடந்த அக்டோபர் 29இல் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது ரூல் கர்வ் முறைப்படி கேரளாவிற்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டது. ரூல் கர்வ் முறைப்படி நவ. 30ஆம் தேதியில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என விதிமுறை உள்ளது. அதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் 45 ஆயிரம் கனஅடி நீரும் இரண்டாவது நாளாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கும் நிலையில், நீர் இருப்பு 93.63 அடியாக உள்ளது.