உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த வாரம் லோயர் கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நான்கு அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்ததைக் கண்டித்து பா.ஜ.க. மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதனடிப்படையில் நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கம்பத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பத்தில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்., “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், பெற்றுத்தந்த உரிமையைக் காக்க முடியாமல் 139.5 அடியாக திமுக அரசு குறைத்துவிட்டது. இந்த முல்லைப் பெரியாறு அணை கட்டும் போது இரண்டு முறை தோல்வியை தழுவியதால் அப்போதைய இங்கிலாந்து அரசு அணை கட்டுமான பணிகளுக்கு பணம் தர மறுத்தது. உடனே பென்னிகுக், தனது நகைகள், சொத்துக்களை விற்று அணையை கட்டினார்.
அதன் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு அணையின் நீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அது இன்று வரை அணை நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் ஜீவநாடியாக திகழ்கிறது. இந்த நிலையில், 2000ஆம் ஆண்டில் கேரள அரசும் அங்குள்ள சில பத்திரிகைகளும் அணை பலமாக இல்லை என்று வதந்திகளை பரப்பியது. 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா கேரள அரசிடம் பேசி, அணையின் பராமரிப்பு பணிகளை முழுமையாக செய்து அணையை புதுப்பொலிவாக மாற்றினார். அப்போது பராமரிப்பு பணிகளுக்காக அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்த கேட்டதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு தொழில்நுட்பக் குழுவினரின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டது. தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். என்றும் பேபி அணையை பராமரிப்பு செய்த பின் 152 அடியாக உயர்த்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு பின் 2006ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் கேரள அரசு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி கேரள அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் கேரளாவில் உள்ள அணைகளின் நீர் மட்டத்தை நிர்ணயம் செய்தது. அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்தது. உடனே ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் மனு செய்து இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.
அந்த நேரத்தில் தான், திமுக ஆட்சிக்கு வந்தது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை. 2012ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். 2013ல் கேரளா, மீண்டும் பூகம்பம் ஏற்படும் என்ற சந்தேகத்தை கிளப்பியது. உச்சநீதிமன்றம் மீண்டும் தொழில்நுட்பக் குழுவினரை அனுப்பியது. அவர்கள் பூகம்பம் ஏற்பட்டாலும் பெரியாறு அணைக்கு ஆபத்து இல்லை என்றனர். பேபி அணையை பலப்படுத்த ரூ.6.5 கோடி விடுவிக்கப்பட்டது. ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்யப்பட்டார். மணல், ஜல்லி, கம்பிகள் ஆகியவை வல்லகடவு வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அங்குள்ள மரங்கள் சிலவற்றை வெட்டினால் தான் பணி செய்ய முடியும் என்று ஒப்பந்தக்காரர் கூறிவிட்டார்.
மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே 2013ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தார். ஆனால் இப்போது திமுக அரசு 139.5 அடியாக குறைத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து உள்ளது. 142 அடியாக உயரும் முன்பு தண்ணீரை திறந்துவிட்டது. ஏன்? அதற்கு உத்தரவிட்டது யார்? அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு என அனைத்தும் நம்மிடம் உள்ளது. அதுபோல் 142 அடியாக உயர்த்த நமக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது 139.5 அடியாக இருக்கும்போதே ஏன் தண்ணீரை திமுக அரசு திறந்துவிட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். நாம் பெற்றுத்தந்த உரிமையை காப்பதும் நமது கடமையாகும். அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவில்லை என்றால் தென்மாவட்ட மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்டச் செயலாளர் சையது கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.