முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாகத் தண்ணீர் பெறும் வகையில் 2வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்புக்காக இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், “இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்ந்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.