அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து மேலும் இருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒன்பது பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பிப்ரவரி 3- ம் தேதி சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து உமாபதி என்பவர் ஏற்கனவே மேல் முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், ஐந்து ஆண்டு தண்டனையை ரத்து செய்யக் கோரி லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய இருவரும் மேல் முறையீடு செய்துள்ளனர். தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் தங்கள் மனுக்களில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.