மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அகில இந்திய அளவில் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாளை பாரத் பந்த் நடைபெற உள்ளது. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “இந்த பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பிற்கு தமிழ்நாட்டில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் நலன் காக்க நடத்தப்படும் இந்த பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அரசு ஊழியர்கள், அனைத்து தோழமைக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து பாரத் பந்த்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவளித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்து மக்களின் நலனை பாதுகாக்க, தமிழகத்திலிருந்து கிளம்பும் இந்த ஆதரவு குரல் அறவழிப் போராட்டம், விவசாயிகளின் எழுச்சி குரலாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.