நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.
அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை இரு அவைகளிலும் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர், 2 மணிக்குப் பிறகு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனையைடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “நாடாளுமன்றத்தில் கட்டுப்பாடற்ற நடத்தை என்னும் பெயரில் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஒ பிரைனும், மக்களவையைச் சார்ந்த 14 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலை அமர்வில் ஜோதிமணி, ரம்யா, குரியாகோஸ், பிரதாபன், ஹிபி ஈடன் ஆகிய 5 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து பிற்பகலில் மாணிக்கம் தாகூர், கனிமொழி, பி.ஆர்.நடராஜன், வி.கே.ஸ்ரீகாந்தம், பெனி பஹான், கே.சுப்பராயன், எஸ்.ஆர். பார்த்திபன், சு.வெங்கடேசன், முகமது ஜாவேத் ஆகிய 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் உள்துறை அமைச்சர் அது குறித்து அவையில் உரிய விளக்கமளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி குரல் எழுப்பியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இடைநீக்கத்தை விலக்கி அனைவரையும் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுகிறோம்” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.