Skip to main content

மோட்டார் வாகன சோதனை ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய போது கைது..!   

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Motor vehicle test inspector arrested for taking bribe

 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் எந்த ஒரு வாகனப் பதிவுக்காகச் சென்றாலும் லஞ்சம் தான். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் கல்லாக்கட்டுகிறார்கள் என்ற தகவல்கள் பரவியது. இந்நிலையில், தஞ்சாவூர் ‘அபி அபி மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் அருண் மற்றும் நிறுவன மேலாளர் அந்தோணி யாக்கப்பா ஆகியோர் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிகலாவிடம் புகார் கொடுத்தனர்.

 

அதேநேரம் அருண், தங்கள் நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து பதிவு செய்த ‘டாடா ஏஸ்’ வாகனத்திற்கு ரூ.2500ம் ஏற்கனவே பதிவு செய்து ஆர்சி புக் வாங்க 2 வாகனங்களுக்கு ரூ.4500 என்று புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கேட்டதை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தாள்களை புரோக்கரிடம் கொடுக்கச் சொல்லிக் கூறியுள்ளனர். மேலும், புகாருக்கான ஆபரேசன் வியாழக்கிழமை (2ஆம் தேதி) என்று நாள் குறிக்கப்பட்டது. 

 

குறிக்கப்பட்ட நாளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த அறிவுரையின்படியே புரோக்கர் கார்த்திகேயனிடம் பணம் கொடுக்கப்பட்டது. அவர், அதைப் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிகலா தலைமையிலான தனிப்படையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் புரோக்கர் கார்த்திகேயன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணையும் கணக்கில் வராத பணம் பற்றிய சோதனையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்