
திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (38). இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர். அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து, இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.