விபத்தில் இறந்தால் கல்லூரியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என தாய் ஒருவர் வேண்டுமென்றே பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாப்பாத்தியின் மகனும் மகளும் கல்லூரி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு பாய்ந்தார். இதில் பேருந்து மோதி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்திற்கு தான் காரணம் இல்லை என பேருந்து ஓட்டுநர் தெரிவித்த நிலையில் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென வேண்டுமென்றே பேருந்தின் முன்பக்கம் மோதுவது போல் நடந்தது தெரியவந்தது.
விபத்தில் உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக தாய் ஒருவர் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.