விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ளது முருக்கேரி. இங்குள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி யுவராணி(25). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இவர்களுக்கு தன்ஷிகா என்ற 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கோபாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் சொந்தமாக உள்ளன. இப்படி நல்ல வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட யுவராணி ஏன் தனது கைக்குழந்தை தன்ஷிகாவுடன் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் குதித்து இறந்துபோன தாயையும் குழந்தையும் சடலமாக வெளியே மீட்டுக் கொண்டுவந்தனர். இரு உடல்களையும் கைப்பற்றிய பிரம்மதேசம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் யுவராணி பிறந்தது திருவெண்ணெய்நல்லூர். இவருக்கும் இவரது கணவர் கோபாலகிருஷ்ணனுக்கும் இருதரப்பு பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். யுவராணி தன் குழந்தையுடன் திருவெண்ணைநல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று வருவாதாக கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த யுவராணி கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராணியின் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடம் மட்டுமே ஆவதால், திண்டிவனம் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். கோட்டாட்சியர் விசாரணைக்குப் பிறகு தாய் சேய் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா அல்லது வரதட்சணை கொடுமையா என்பது பற்றிய தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். 6 மாத கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.