
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அள்ளம் சேனவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜையன் (48). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். அங்கு வேலை செய்யும் காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளில் அந்த பெண் ஊழியர் வீட்டிற்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு 11 வயதில் மகள் உள்ளார். பெண் வீட்டிற்கு செல்லும் ராஜையன், அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இது கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் அறிந்த அந்த பெண் ஊழியரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனகா, குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி மீதான பாலியல் தொல்லைக்கு தாயும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய், ராஜையன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி சிறுமியின் தாய் தக்கலை பெண்கள் சிறைச்சாலையிலும், ராஜையன் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு தாயே உடந்தையாக இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.