மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2026 அக்டோபரில் எப்படி மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக நடத்தி கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில் 36 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை அதற்கான எந்தக் கட்டுமான பணிகளும் தொடங்காத நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியை மீறிய சுகாதாரத் துறைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கே.கே.ரமேஷ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக 1973.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைக் கட்டுவதற்கு 5 வருடம் 8 மாத காலமாகும் அதாவது 2026 அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்படும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 2026 அக்டோபரில் எப்படி மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.