ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாமோதரன் செல்வி ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவதாகப் பிறந்த மகள் வேதவள்ளி(18). இவர் பிறந்த சில ஆண்டுகளில் ஒரு கால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. தினமும் வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு என்கிற நிலையால் சரியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அடுத்த ஒரு வருடத்தில் மற்றொரு காலும் செயல்படாமல் போயியுள்ளது. அதன்பின் வலது கையும் செயல்படாத நிலையாகி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாமோதரன் உடல் நிலை குறைவின் காரணமாக உயிரிழந்துவிட்டார். அதுவரை தட்டி தடுமாறி சென்று கொண்டிருந்த குடும்பத்தின் சூழ்நிலை மேலும் மேலும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. தாயின் வருமானம் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையால் செல்வி வேலைக்கு செல்லத்துவங்கினார். இதனால் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட ஆள் இல்லாததால் வேதவள்ளியின் கல்விக்கு 8-ஆம் வகுப்போடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து தாய் செல்வி கூலி வேலைக்கு சென்று தன்னுடைய மூன்று மகள்களை வளர்த்து வந்துள்ளார். இரண்டு மகள்களை திருமணம் செய்துவைத்து அவர்களை அனுப்பிவிட்டார். மாற்று திறனானியான இந்த பெண் மட்டும் வீட்டிலேயே உள்ளார். செல்வி காலையில் சமைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார். மாலை வரும் வரை இந்த மாற்றுத் திறனாளி பெண் மற்றவர் உதவி இல்லாமல் நடக்க முடியாமல் முடங்கிப்போய் வீட்டில் இருந்து வருகிறார்.
தனது தாயின் மறைவுக்கு பின்னர் இந்த பெண்ணின் வாழ்க்கை என்பது பெரும் கேள்விக் குறியாகிவிடும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தாமாக முன்வந்து முடங்கியுள்ள வேதவள்ளிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது தாய், செல்வி மகள் வேதவள்ளி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
10 மாதம் வயிற்றிலும் 18 ஆண்டுகளாக தோளிலும் சுமந்து வரும் வேதவள்ளியின் துயரத்தையும், செல்வியின் வேதனையையும் போக்க அரசு முன்வர வேண்டும்.